தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் டாஸ்மாக் கடை மூடல்: திருஷ்டி சுற்றி வரவேற்ற மக்கள்

தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை அடுத்து, தங்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள், பெண்கள் மற்றும் வியாபாரிகள் அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
பொதுமக்கள் வரவேற்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியின் 30-வது வார்டில் உள்ள முக்கிய வணிகப் பகுதியான பூ மார்க்கெட் வளாகத்தின் அருகே ஒரு டாஸ்மாக் கடை நீண்ட காலமாக செயல்பட்டு வந்தது. இந்த கடையின் மூலம் பெண் வியாபாரிகள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். மேலும் மதுப்பிரியர்களின் இடையூறுகளால் அப்பகுதியில் அடிக்கடி சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தன.

டாஸ்மாக் கடை மூடல்:

இதன் காரணமாக, இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக இப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி, தற்போது பொதுமக்களின் நியாயமான கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள், மதுபானக் கடையை அங்கிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

பொதுமக்கள் வரவேற்பு:

அதன்படி நேற்று அக்கடை அங்கிருந்து முழுமையாக காலி செய்யப்பட்டு, வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. தங்கள் பகுதியின் மிக முக்கிய பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து, நீண்ட நாள் கனவு நிறைவேறியதால் பொதுமக்கள், பெண்கள் மற்றும் வியாபாரிகள் அரசின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்தனர். மேலும் அப்பகுதியினர் மூடப்பட்ட அந்த டாஸ்மாக் கடையின் முன்பு பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com