

செங்கல்பட்டு,
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி, செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பார்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் முன்கூட்டியே மதுபானங்களை வாங்கி வைக்க திட்டமிட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் வகையில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, நாளை காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான அக்டோபர் 6-ஆம் தேதி நள்ளிரவு வரை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
இதனை தொடர்ந்து, பதிவான வாக்குகள் எண்ணப்படும் நாளான அக்டோபர் 9-ஆம் தேதியும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்கும். இந்த 4 நாட்களிலும் அரசு டாஸ்மாக் கடைகள், அதனுடன் இணைந்த பார்கள் மற்றும் தனியார் ஓட்டல்களில் இயங்கி வரும் மதுபான பார்கள் அனைத்தும் முற்றிலும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
விதிகளை மீறி எவரேனும் மது விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.