டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவது நிறுத்தம்: மது பிரியர்கள் உற்சாகம்

பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவது நிறுத்தம்: மது பிரியர்கள் உற்சாகம்
Published on

சென்னை,

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனை கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. இந்த 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் மது வாங்குபவர்கள், காலி மதுபாட்டில்களை கொடுத்துவிட்டு ரூ.10 திரும்பப் பெறும் திட்டம், 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தை அப்போதைய எதிர்க்கட்சியான அதிமுக, பாஜக மற்றும் புதுவரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, சட்டசபை தேர்தல் நடைபெறும்போது கோவையில் உள்ள பெரும்பாலான 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் ரூ.10 'ஸ்டிக்கர்' இன்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

சமீபத்தில் தமிழக முதல்-அமைச்சராக விஜய் கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றார். விஜய்யின் நேரடி கண்காணிப்பின் கீழ் டாஸ்மாக் நிர்வாகம் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து, கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவர் பதவியேற்ற நாளிலிருந்து மதுபாட்டிலுக்கு கூடுதலாக வாங்கப்பட்டு வந்த ரூ. 10 நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ. 10 வாங்குவது நிறுத்தப்பட்டதா? என்ற அதிகாரப்பூர்வத் தகவல்கள் இன்னும் வெளிவராத நிலையில், கூடுதலாக வசூலிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் ரூபாய் 10 நிறுப்பட்டுள்ளது உற்சாகத்தை தருவதாகவும் மதுப்பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com