கரூரில் வரி ஏய்ப்பு; கொசுவலை நிறுவனத்தில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை

கரூரில் வரி ஏய்ப்பு விவகாரத்தில் கொசுவலை நிறுவனத்தில் 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூரில் வரி ஏய்ப்பு; கொசுவலை நிறுவனத்தில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை
Published on

கரூர்,

கரூர் வெண்ணைமலை பகுதியில் ஷோபிகா என்கிற பிரபல தனியார் கொசுவலை ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. கரூர்-சேலம் பை-பாஸ் சாலை சிப்காட் மற்றும் சின்னதாராபுரம் ரோடு உள்ளிட்ட இடங்களில் அந்த நிறுவனம் சார்பில் கொசுவலை உற்பத்தி நடக்கிறது.

இங்கு உற்பத்தியாகும் கொசுவலைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் மதுரை, கோவை மற்றும் வெளிமாநிலங்களிலும் உள்ளன. இந்த நிறுவன உரிமையாளர் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனமும் நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் இந்த நிறுவன கணக்குகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்த போது, அந்த நிறுவனம் வரிஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக கடந்த 15ந்தேதி, கரூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் தனித்தனியாக பிரிந்து சென்று இந்த கொசுவலை நிறுவன குழுமத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டனர்.

அதன்படி, வெண்ணைமலையில் உள்ள இந்த கொசுவலை நிறுவன அலுவலகம் மற்றும் கரூர்-சேலம் பை-பாஸ் சாலையில் கொசுவலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மற்றும் கரூர் ராம்நகரில் உள்ள அந்த நிறுவன உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, கோவை மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள இந்த குழுமத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

வெளிநபர்கள் யாரும் உள்ளே புகுந்துவிடாதபடி சோதனை நடந்த இடங்களில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் வரவு-செலவு கணக்கு ஆவணங்களையும் ஆய்வு செய்த அதிகாரிகள், கணக்கில் வராத பணம் பதுக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்தனர்.

இதில் அந்த நிறுவன உரிமையாளர் வீட்டில், துணிகள் அடுக்கிவைக்கும் அலமாரியில் 2000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அந்த பணம் குறித்து விசாரித்த போது, அது கணக்கில் வராத பணம் என்று தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அதை பணம் எண்ணும் எந்திரம் கொண்டு அதிகாரிகள் எண்ணிப்பார்த்த போது அதில் சுமார் ரூ.23 கோடி இருப்பது தெரியவந்தது. இந்த சோதனையில் ரூ.23 கோடி மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து இருப்பதாக வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர் கடந்த 16ந்தேதி தெரிவித்தார்.

மேலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் நடந்த சோதனையில் சில இடங்களில் மேலும் பல கோடி ரூபாய் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றிய முழுமையான விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து நேற்று 3வது நாளாக கொசுவலை நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அந்நிறுவனத்தின் அலுவலகங்கள், உரிமையாளரின் வீடு, தொழிற்சாலை என 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில் ஏறக்குறைய ரூ.435 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வந்தது. இதுவரை கணக்கில் காட்டப்படாத ரூ.32.6 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 10 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து இன்று 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. கொசுவலை நிறுவன உரிமையாளரின் வீடு, தொழிற்சாலை மற்றும் அலுவலகம் உள்பட 5 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com