வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் நிறைவு: ஆயத்த ஆடைகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும்

துபாய் வழியாக ஓமன் நாட்டுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நடந்து வந்தது.
திருப்பூர்,
பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. 60 சதவீதம் அமெரிக்காவுடன் நடந்து வந்த நிலையில், 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அறிவித்தது.
இது திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை முன்னேற்ற நிலையில் ஒருபுறம் நடந்தாலும், ஏற்கனவே செய்து வந்த வர்த்தகத்தின் இழப்பை ஈடு செய்யும் வகையில் மாற்று சந்தையை நோக்கி ஏற்றுமதியாளர்கள் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில் இந்தியா பிற நாடுகளுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்தடுத்து அமைத்து வருகிறது. உலக நாடுகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக உறவை மேம்படுத்தம் வகையில் வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருகின்றன.
அதன்படி வங்கதேசம், ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், தென்கொரியா, சுவிட்சர்லாந்து, மொரீசியஸ், ஐஸ்லாந்து, நார்வே ஆகிய 9 நாடுகளுடன் இந்தியா வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்து நடைமுறையில் உள்ளது. இதுதவிர இங்கிலாந்துடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி வரும் நிதியாண்டில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் ஓமன் நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் அமைக்கப்பட்டது. 3 நாட்களுக்கு முன்பு நியூசிலாந்துடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலமாக ஏற்கனவே 10 சதவீத வரியை செலுத்தி நியூசிலாந்துடன் வர்த்தகம் செய்த நிலை மாறி, இனி வரியில்லாமல் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்யும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கு முன்பு துபாய் வழியாக ஓமன் நாட்டுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நடந்து வந்தது. தற்போது நேரடியாக வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் 5 சதவீத வரி சலுகையுடன் நேரடியாக ஏற்றுமதி வாய்ப்பு உருவாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் உருவாகும் வர்த்தக ஒப்பந்தம் மேலும் சாதகமாக அமையும் என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அமெரிக்க சந்தையின் வர்த்தக இழப்பை ஈடு செய்ய, மாற்று சந்தையை நோக்கி திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.






