வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி - செல்வப்பெருந்தகை கண்டனம்

நிலத்தடி நீர் என்பது தனிநபருக்குரிய சொத்து அல்ல என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி - செல்வப்பெருந்தகை கண்டனம்
Published on

சென்னை,

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;

"வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு மத்திய அரசு வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளது என்ற செய்தி விவசாயிகள் சமுதாயத்திற்கு மட்டுமல்ல நமக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஜல்சக்தி துறையின் மந்திரி சி.ஆர்.பாட்டீலின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நிலத்தடி நீருக்கு வரி என்பது விவசாயிகளை வெட்டும் கத்தியாகும், விவசாயம் நமது நாட்டின் முதன்மைத் தொழிலாகும்.

இப்போது இயற்கை வளமான நிலத்தடி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்திவரும் விவசாயிகளிடம் வரி வசூலிக்கப்படும் என்ற முடிவு, விவசாயத்துறையை அழித்து விடும். பயிர் செய்பவர் ஏற்கனவே மழை இல்லை, மின்சாரம் கட்டணம் உயர்வு, உரம் விலை உயர்வு, விளைச்சலுக்கு சரியான விலை இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் நிலத்தடி நீருக்கே வரி எனும் அரசு திட்டம், விவசாயியின் முதுகில் குத்தப்படும் அரிவாளாக இருக்கும். நீரே இல்லாமல் வறண்டு போகும் நிலத்தில் தன்னம்பிக்கையுடன் போராடும் விவசாயிக்கு இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

நிலத்தடி நீர் என்பது தனிநபருக்குரிய சொத்து அல்ல. இது அனைவருக்கும் உரிய இயற்கை வளமாகும். அதனை வரி மூலமாக கட்டுப்படுத்துவது அவர்கள் மீது திணிக்கப்படும் அராஜக செயலாகும். விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், விவசாய பெருங்குடி மக்களுடன் இணைந்து மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com