மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பிய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம்

மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப் குழுக்களில் பரப்பிய தமிழ் ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் பரப்பிய தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம்
Published on

மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப் குழுக்களில் பரப்பிய தமிழ் ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வாட்ஸ்-அப்பில் வந்த வீடியோ

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வதாக வாட்ஸ்-அப் குழுக்களில் நேற்று வீடியோ ஒன்று வெளியானது. இதை தொடர்ந்து அந்த பள்ளியில் நேரடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் மணிமேகலைக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டார்.

இதையடுத்து பள்ளியில் மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியர் அனுமுத்துராஜ் என்பவர், தலைமை ஆசிரியர் மீது பொய்யான புகார் அளிக்கும் வகையில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவப்பெயர் ஏற்படுத்த திட்டம்

இதற்காக அந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்களை அழைத்து கழிவறையை சுத்தம் செய்வதை போல தனது செல்போனில் ஆசிரியர் அனுமுத்துராஜ் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ்-அப் குழுக்களில் வெளியிட்டது விசாரணையில் தெரியவந்தது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் காந்திமதி என்பவருக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த செயலில் தமிழ் ஆசிரியர் அனுமுத்துராஜ் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

இதை தொடர்ந்து மத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் மணிமேகலை நடத்திய நேரடி விசாரணையின் அடிப்படையில் மல்லப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் அனுமுத்துராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழ் ஆசிரியர் அனுமுத்துராஜ், தவறான செயலில் ஈடுபட்டு பள்ளிக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக கலெக்டர் உத்தரவின்பேரில், தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தனர்.

தீவிர விசாரணை

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் அனுமுத்துராஜ் திருப்பத்தூர் மாவட்டம் மண்டல நாயனகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். அவரிடம் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமை ஆசிரியருக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக உடன் பணிபுரியும் ஆசிரியரே, மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து வீடியோ எடுத்து வாட்ஸ்-அப் குழுக்களில் பரப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com