

தூத்துக்குடி,
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. திருச்சபைக்குச் சொந்தமான தூய இம்மானுவேல் ஆலயத்தை முற்றுகையிட்டு, அங்கு பணியாற்றி வரும் குருவானவரை மாற்றக் கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ. திருச்சபைக்குச் சொந்தமான தூய இம்மானுவேல் ஆலயத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குருவானவராக காலேப் மான்சிங் பணியில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த வேத பாட ஆசிரியை சுபா என்பவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆசிரியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, குருவானவர் காலேப் மான்சிங் மீது கடந்த ஜூன் 14-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதன் பின்னர் அவர் காவல் நிலைய ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த வழக்கின் தொடர்ச்சியாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராதனைக்கு வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆலய வளாகத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்த ஆலயத்திற்கு காலேப் மான்சிங் வந்த நாள் முதல் தொடர்ந்து பிரச்சினைகள் நிலவி வருகின்றன. ஊழியம் செய்ய வரும் பெண்களைக் கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்தி வருகிறார். வயது முதிர்ந்தவர்கள் ஊழியம் செய்யக் கூடாது என்றும், தனது பேச்சைக் கேட்பவர்கள் மட்டுமே ஊழியம் செய்ய முடியும் என்றும் வற்புறுத்துகிறார்.
இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அலுவலகம் மற்றும் பேராயரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இவரை உடனடியாக மாற்றிவிட்டு வேறு புதிய குருவானவரை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, குருவானவரின் தூண்டுதலின் பேரில் ஆலய ஊழியர் ஒருவர் தங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாகக் கூறி போராட்டக்காரர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்ததை கண்டித்து நடந்த இந்த வாக்குவாதத்தால் ஆலய வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.