

சென்னை,
தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வின் தகுதி மதிப்பெண்ணை ஒரே மாதிரியாக 40 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தகுதிப் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கான தேர்ச்சி மதிப்பெண் 50% ஆகவும் உயர்த்தப்பட்டதை ஒரே மாதிரியாக 40 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும்.
கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பிற விதிகளைப் பின்பற்றி நியமிக்கப்படுகின்றனர். 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமில்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனால், அவர்களுக்கு தகுதித் தேர்வைக் கட்டாயமாக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.
தமிழ்நாட்டில் 2011ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது. ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் என அறிவித்துவிட்டு, 10ஆம் வகுப்பு பாடம் வரையிலான வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததாகவும், 75 சதவீத கேள்விகள் நேரடியாக பதிலளிக்கும் வகையில் இல்லாமல் மிகக் கடினமான முறையில் இருந்ததாக ஆசிரியர்கள் கூறினர். நேற்று 2ஆம் தாள் தேர்வும் பாதிக்கு மேல் கடினமாக இருந்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வரை ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பொதுப்பிரிவினர் 60% (150க்கு 90) மதிப்பெண்களும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% (150க்கு 82) மதிப்பெண்களும் பெற வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஜனவரி 28ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினரில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 40% ஆகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கான தேர்ச்சி மதிப்பெண் 50% ஆகவும் உயர்த்தப்பட்டது.
தகுதி மதிப்பெண்ணை ஒரே மாதிரியாக 40 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பாடமெடுக்கும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு, அதிலுள்ள பாடத்திட்டங்களை உள்ளடக்கி தனித் தேர்வு நடத்த வேண்டும். 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனித் தேர்வும், 9ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு அவர்களுக்கான பாடத்திட்டத்துடன் கூடிய தனித் தேர்வும் நடத்த வேண்டும். பாடத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அதிலிருந்து விலகாமல் தேர்வுகள் நடத்த வேண்டும்.
இத்தேர்வுகள் ஆசிரியர்கள் தங்கள் பணியில் தொடர்வதற்குத்தான், புதிய பணி நியமனத்திற்கானது அல்ல. எனவே, இத்தேர்வு எழுதும் அனைவருக்கும் ஒரே தேர்ச்சி மதிப்பெண் என்பதை 40 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கையான நேற்று முன்தினம் நடந்த முதல் தாள் தேர்வு, நேற்று நடந்த 2ஆம் தாள் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் அனைவருக்கும் தேர்ச்சிக்கு 40 சதவீதம் மதிப்பெண்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இக்கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு நிபந்தனையின்றி ஏற்று, தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று பணியில் தொடர்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.