ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு: அரசாணை வெளியீடு

நடப்பாண்டில் 3 முறை சிறப்பு தகுதித் தேர்வை நடத்த இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு: அரசாணை வெளியீடு
Published on

சென்னை,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் இருக்கும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் ஆசிரியர்கள் தகுதித் தேர்வை எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்தநிலையில், இவர்களுக்கு, நடப்பாண்டில் 3 முறை சிறப்பு தகுதித் தேர்வை நடத்த இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.

பிற மாநிலங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து இருப்பது போல, தமிழகத்திலும் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:-

150 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள்-1 மற்றும் தாள்-2 தேர்வுகளில் பொதுப்பிரிவினருக்கு 60 சதவீதம் (90 மதிப்பெண்), இதர பிரிவினருக்கு 55 சதவீதம் (82.5 மதிப்பெண்) தேர்ச்சி மதிப்பெண்ணாக இருந்தது. தற்போது இந்த தேர்ச்சி மதிப்பெண் பொதுப்பிரிவினர் தவிர மற்றவர்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினரை பொறுத்தமட்டில் ஏற்கனவே இருப்பது போன்று 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.), பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிறபடுத்தப்பட்டோர், சீர்மரபினர், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகவும் (75 மதிப்பெண்), எஸ்.சி., எஸ்.சி.(அருந்ததியர்), எஸ்.டி. பிரிவினருக்கு 55 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும் (60 மதிப்பெண்) தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படுகிறது.

11.8.2025 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பின்படி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கு தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பின்பற்றுவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்வுக்கும் பொருந்தும்

கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்ட ஆசிரியர் தகுதித்தாள் தேர்வை 4.24 லட்சம் பேர் எழுதி உள்ளனர். அவர்களுக்கான தேர்வு முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த அரசாணை மூலம் அவர்களுக்கும் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com