காட்டு பன்றியிடம் இருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய ஆசிரியர் - இறங்க முடியாமல் தவித்தவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

ரப்பர் மரத்தில் ஏறிய ராதாகிருஷ்ணன் மரத்தின் கிளை இடுக்கில் சிக்கிக்கொண்டார்.
காட்டு பன்றியிடம் இருந்து தப்பிக்க மரத்தில் ஏறிய ஆசிரியர் - இறங்க முடியாமல் தவித்தவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
Published on: 

கன்னியாகுமரி,

காட்டு பன்றியிடம் இருந்து தப்பிக்க மரத்தில் ஏறி, இறங்க முடியாமல் தவித்தவ ஆசிரியரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

ரப்பர் தோட்டம்

கன்னியாகுமரி-கேரளம் எல்லை பகுதியான வெள்ளறடை குருசுமலை அருகே உள்ள கோவிலூர் கலப்பகோணம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், கூதாழி அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் அதிகாலையில் தனது ரப்பர் தோட்டத்துக்கு சென்று பால் வடிப்பு தொழில் செய்து பால் எடுத்து வருவது வழக்கம்.

காட்டுப் பன்றி

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம்போல் ராதாகிருஷ்ணன் கலப்பகோணம் பகுதியில் உள்ள தனது ரப்பர் தோட்டத்துக்கு சென்றார். அங்கு அவர் ரப்பர் பால்வடிப்பு செய்து கொண்டிருந்தபோது திடீரென காட்டுப்பன்றி ஒன்று அவரை நோக்கி பாய்ந்து வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் காட்டுப் பன்றியிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

மரத்தில் ஏறினார்

பின்னர் அருகில் உள்ள பாறையின் மீது ராதாகிருஷ்ணன் ஏறிக்கொண்டார். ஆனாலும் காட்டுப் பன்றி அவரை துரத்த முயற்சித்தது. இதனால் பயந்துபோன அவர் பாறையின் அருகில் நின்ற ரப்பர் மரத்தில் ஏறிக்கொண்டார். சில நிமிடங்களுக்கு பின்னர் காட்டுப்பன்றி அங்கிருந்து சென்றது. ஆனால் மரத்தில் ஏறிய ராதாகிருஷ்ணன் மரத்தின் கிளை இடுக்கில் சிக்கிக்கொண்டார்.

தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

இதனால் கீழே இறங்க முடியாமல் தவித்த அவர் தன்னிடம் இருந்த செல்போனை எடுத்து பாறசாலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலப்பகோணம் பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் மரத்தின் கிளையில் சிக்கி தவித்த ராதாகிருஷ்ணனை பத்திரமாக கீழே இறக்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com