

நாகர்கோவில்,
அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த அரசுப் பள்ளி மாணவியை, அவருடைய ஆசிரியை விமானத்தில் அழைத்துச்சென்று அசத்தினார்.
நாகர்கோவில் அனந்தநாடார்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தாவரவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் மலர்விழி. இவர் கடந்த கல்வி ஆண்டின் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின்போது மாணவ- மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக தான் பயிற்றுவித்த தாவரவியல் பாடத்துடன் இணைந்த உயிரியல் பாடத்தில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவரை, தனது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆசிரியரின் இந்த ஊக்கத்தைப் பயன்படுத்தி சிறப்பாகப் படித்த மாணவி மகிழா, பொதுத் தேர்வில் 90 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இவர் 600-க்கு 524 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தற்போது இவர் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பை தொடர இருக்கிறார்.
இதற்கிடையே ஆசிரியை மலர்விழி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மாணவி மகிழாவை விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவு செய்தார். அதன்படி கடந்த மாதம் 23-ந்தேதி ஆசிரியை மலர்விழி, மாணவி மகிழாவை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் மாணவியை அழைத்துச் சென்றார். அங்கிருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்தில் மாணவியை அழைத்து வந்தார். மாணவியின் கனவாக இருந்த விமானப் பயணத்தை ஆசிரியை மலர்விழி தான் அளித்த வாக்குறுதி மூலமாக நிறைவேற்றியது அவரை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. பின்னர் அங்கிருந்து ரெயிலில் ஏ.சி. பெட்டியில் ஆசிரியையும், மாணவியும் பயணித்து 26-ந்தேதி நாகர்கோவில் வந்தடைந்தனர்.
ஆசிரியை மலர்விழி இதற்கு முன்பு மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியபோது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு செயல்பாடுகளில் சிறப்பாகப் பங்காற்றிய 4 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களை டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. அரசு பள்ளி மாணவர்களின் திறனை வெளிக்கொணர தொடர்ந்து பல்வேறு ஊக்க நடவடிக்கைகளை எடுத்து வரும் ஆசிரியையின் இந்த செயலை தலைமை ஆசிரியர் ஐரிஷ் லிண்ட், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டினர்.
விமானப் பயணம் மேற்கொண்ட அரசு பள்ளி மாணவி மகிழா, கடந்த சில தினங்களுக்கு முன்பு காலைநேர கூடுகையின்போது பள்ளிக்கு வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என்னை விமானத்தில் அழைத்துச் செல்வதாக ஆசிரியை என்னிடம் தகவல் தெரிவித்ததும் எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நான் முதன்முதலாக விமானத்தில் இப்போதுதான் பயணம் செய்திருக்கிறேன். மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்குகூட கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக ஆசிரியை மலர்விழிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.