பாட புத்தகங்களை எடைக்கு போட்ட ஆசிரியர்: நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

பேப்பர் வியாபாரி ஒருவரை வரவழைத்து, அந்த புதிய புத்தகங்களை மிக குறைந்த விலைக்கு ஆசிரியர் விற்றுள்ளார்.
பாட புத்தகங்களை எடைக்கு போட்ட ஆசிரியர்: நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆலத்தம்பாடி பகுதியில் ஜானகி அண்ணி அரசினர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி 1957-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மிகப்பழமையான மற்றும் புகழ்பெற்றபள்ளியாகும். இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏழை எளிய மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

விடுமுறை நாளில்

இந்த பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்ற ஒருவர், பள்ளி விடுமுறை தினத்தன்று பள்ளிக்கு வந்துள்ளார். அவர் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான நடப்பு கல்வியாண்டிற்கான புதிய நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பாடப்புத்தகங்களைத் தனியாகப் பிரித்து வைத்துள்ளார். இதன் பின், பழைய இரும்பு மற்றும் பேப்பர் வியாபாரி ஒருவரை வரவழைத்து, அந்த புதிய புத்தகங்களை மிக குறைந்த விலைக்கு எடைக்கு விற்றுள்ளார்.

மூட்டைகள்

புத்தகங்களை வாங்கிய வியாபாரி, அவற்றை மூட்டைகளாக கட்டி தனது வாகனத்தில் ஏற்ற தொடங்கியுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் சிலர் அவரது நடமாட்டத்தை கவனித்துள்ளனர். வியாபாரியை சூழ்ந்து தடுத்து நிறுத்திய பொதுமக்கள், வாகனத்தில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர்.

பாடப்புத்தகங்கள்

அதில் நடப்பு கல்வியாண்டிற்குரிய புதிய அரசு பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அரசு இலவசமாக வழங்கும் புத்தகங்களை எடைக்கு விற்ற ஆசிரியர் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com