பள்ளியில் திருமண நாள் கொண்டாடிய ஆசிரியர் பணியிட மாற்றம்

பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிக்கம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுதாகர் என்பவர் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி சொர்ணா அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் தம்பதியான சுதாகர்- சொர்ணா திருமண நாள் வந்தது. இருவரும் ஒரே பள்ளியில் பணிபுரிந்ததால் பள்ளி வேலை நேரத்தில் அனைத்து ஆசிரியர்களும் அவர்களின் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினர். கேக் வெட்டி திருமண நாள் கொண்டாடிய வீடியோவை ஆசிரியர் தம்பதியினர் சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
இந்த வீடியோ வைரலாக பரவியது. அதைத்தொடர்ந்து இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மலைவாசன் விசாரணை நடத்தினார். விசாரணையை தொடர்ந்து திருமண நாளை பள்ளியில் கொண்டாடிய ஆசிரியர் சுதாகர் உதயேந்திரம் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று தலைமை ஆசிரியை சரோஜினி வெங்கிளி பள்ளிக்கு மாற்றப்பட்டார்.






