சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்கள் விடுவிப்பு

கைது செய்யப்பட்டு மண்டபம் மற்றும் சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்ட ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்கள் விடுவிப்பு
Published on

சென்னை,

சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 7 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அதேபோல், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு முழு நேர ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கோரியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித்தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரியும் போராட்டம் நடத்தினர்.

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக நேற்று சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரைக்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை இன்று காலை போலீசார் கைது செய்து திருமண மண்டபம் மற்றும் சமூகநலக் கூடங்களில் தங்கவைத்தனர்.

இதையடுத்து பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து டெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்களின் போராட்டமும் வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டு மண்டபம் மற்றும் சமூகநலக் கூடங்களில் தங்கவைக்கப்பட்ட ஆசிரியர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com