காலை உணவு திட்ட கண்காணிப்பு நடைமுறையில் மாற்றம் தேவை: ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை செப்., 22-ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
காலை உணவு திட்ட கண்காணிப்பு நடைமுறையில் மாற்றம் தேவை: ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
Published on: 

சென்னை:

பள்ளிகளில் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டங்களை கண்காணிக்க இரு வேளைகளிலும் ஒரே ஆசிரியரை நியமிக்கும் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இன்சென்ட் திவ்யா, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் லதா, தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக கடந்த 2022-ம் ஆண்டு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தற்போது 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஆசிரியர்கள் எதிர்ப்பு

காலை உணவு திட்டத்தை கண்காணிப்பதற்கான வழிகாட்டு நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரை சுழற்சி முறையில் கண்காணிப்பு ஆசிரியராக நியமிக்க தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், காலை 8.30 மணி முதல் 8.50 மணி வரை மாணவர்களுக்கு உணவு பரிமாற வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக கண்காணிப்பு ஆசிரியர் காலை உணவை சாப்பிட்டு சரிபார்த்த பின்னரே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகளுக்கு ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து, காலை மற்றும் மதிய உணவு திட்டங்களை கண்காணிக்க இரு வேளைகளிலும் ஒரே ஆசிரியரை நியமிக்கும் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com