டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிப்பு: தரையில் பாலை கொட்டி போராட்டம்

டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் போனதாக கூறி சென்னையில் பால் உற்பத்தியாளர்கள் தரையில் பாலைக் கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிப்பு: தரையில் பாலை கொட்டி போராட்டம்
Published on

சென்னை,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மருந்தகங்கள், ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்குகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோனதாக கூறி நூதன போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் நேற்று சுமார் 300 லிட்டர் அளவு பசும் பாலை தரையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர்.

இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

சென்னையில் ஆயிரக்கணக்கான பால் உற்பத்தியாளர்கள் உள்ளார்கள். தினமும் பசு மாடுகளில் இருந்து பெறப்படும் பாலை ஓட்டல்கள், டீக்கடைகளுக்கு வினியோகம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கடைகள் மூடப்பட்டதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் பயம் காரணமாக எங்களிடம் பாலை பெற யோசிக்கிறார்கள். இதனால் எங்களிடம் உள்ள பாலை என்ன செய்வதென்றே தெரியவில்லை. மாடுகளுக்கு தீவனம் வாங்குவதற்கு கூட வழியில்லாமல் தவிக்கிறோம். எனவேதான் பாலை தரையில் கொட்டி போராடுகிறோம்.

எங்களின் நிலைமையை உணர்ந்து ஆவின் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் எங்களிடமிருந்து பசும் பாலை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். வருமானம் இன்றி தவிக்கும் எங்களுக்கு அரசுதான் உதவ வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com