

ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). நகர கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமுதவள்ளி (50). பெண் செவிலியர் உதவியாளராக (நர்சு) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். அமுதவள்ளி, தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமாரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய வாட்ஸ்-அப் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன் பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளை பேரம் பேசி விற்ற நர்சு, கணவருடன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரமேஷ் இந்த தகவலை தெரிவித்தார். ராசிபுரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளில் பிறந்த 4800 குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கொல்லிமலையில் வீட்டில் பிரசவம் பார்த்த குழந்தைகளின் விவரங்களையும், தத்து கொடுத்த ஆவணங்களை சரிபார்க்கவும் 5 பேர் கொண்ட 2 குழு அமைக்கப்பட்டுள்ளது.