சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு

நள்ளிரவை கடந்தும் விமானம் பழுது பார்க்கப்பட்டு, மீண்டும் புறப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இருந்து  கொல்கத்தா புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு
Published on

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு 7.40 மணிக்கு புறப்பட இருந்தது. 180 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 187 பேர் அதில் செல்ல இருந்தனர். ஆனால் விமானம் காலதாமதமாக இரவு 10.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி விமானம் இரவு 10.15 மணிக்கு விமான நிலைய நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு செல்ல முயன்றபோது திடீரென எந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமான என்ஜினீயர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி, விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் மீண்டும் கொல்கத்தாவுக்கு புறப்பட்ட விமானத்தில் மீண்டும் எந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் அவசரமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் நள்ளிரவை கடந்தும் விமானம் பழுது பார்க்கப்பட்டு, மீண்டும் புறப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இணைப்பு விமானங்களில் செல்ல வேண்டிய பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெளியூரைச் சேர்ந்த பயணிகள் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். சில பயணிகள் தங்கள் பயண தேதியை மாற்றிவிட்டு சென்றனர். இதற்கிடையே விமானத்தில் ஏற்பட்ட எந்திரக் கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 180 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com