

தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள சக்கராப்பள்ளி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவருடைய மனைவி அனீப்நிஷா (22 வயது). இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரு மாதத்துக்கு முன்பு அனீப்நிஷா கணபதி அக்ரஹாரம் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் ரியாஸ் அகமது தனது வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சிக்காக உறவினர்கள் வந்திருப்பதாக கூறி அனீப்நிஷாவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். விசேஷ நிகழ்ச்சிகள் முடிந்து இரவு 10 மணிக்கு மேல் அனீப் நிஷாவை அவருடைய தாயார் வீட்டில் ரியாஸ் அகமது அழைத்துச்சென்று விட்டுள்ளார்.
இந்த நிலையில் வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் அனீப்நிஷா சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். இதைப் பார்த்து பதறிப்போன அவருடைய தாயார் பரிதா உடனடியாக அனீப்நிஷாவை அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைகு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பரிதா கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனீப்நிஷாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் அவருடைய சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என்பது குறித்து கும்பகோணம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணமான 3 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.