

திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகர் எதிரில் உள்ள கடற்கரையில் நேற்று 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். வாலிபரின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கிருந்த மீனவர்கள் உடனடியாக கடலுக்குள் சென்று வாலிபரை தேடினர்.
ஆனால் சற்று நேரத்திலே அந்த வாலிபர் உடல் கரை ஒதுங்கியது. திருவொற்றியூர் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். ஆனால் அந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் அலையில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான நிலையில் மீண்டும் வாலிபர் ஒருவர் ராட்சத அலையில் சிக்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.