

பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.24 ஆயிரத்து 500 எடுத்து கொண்டு வெளியே வந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவருடன் நின்று கொண்டிருந்த இளம்பெண், லாரி டிரைவர் மீது ஏதோ ஒன்றை தடவினார். இதில் மயக்கமடைந்த லாரி டிரைவரிடம் இருந்து அவர்கள் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடி சென்றனர். இதையடுத்து மயக்கம் தெளிந்த லாரி டிரைவர் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே நின்று கொண்டு இருந்த அந்த இளம்பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் கையும், களவுமாக பிடித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.