

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் நகர பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக திருவாரூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்கபூர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவாரூர் பேபி டாக்கீஸ் சாலை பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சீராத்தோப்பு பகுதியை சேர்ந்த சரவணன் மகன் அன்பரசன்(வயது22) என்பதும், அவர் விற்பனைக்காக 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசனை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.