

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியைக் கர்ப்பமாக்கிய வாலிபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரும், அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவரும் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த வாலிபர் சிறுமியிடம் அவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நெருக்கமாக இருந்துள்ளார். இதில் அந்தச் சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த சிறுமி, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த வாலிபரிடம் கேட்டுள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்த வாலிபர், இந்த விஷயத்தை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாகச் சிறுமிக்கு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமியைக் கர்ப்பமாக்கி கொலை மிரட்டல் விடுத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட 18 வயது வாலிபரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.