

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கீழலட்சுமிபுரத்தை சேர்ந்த சகாயராஜ் மகன் சாமுவேல் ராஜ் (20 வயது). இவர் தனது தந்தையுடன் சென்டிரிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சாமுவேல் ராஜ் ஆன்லைன் லோன் ஆப் மூலம் கடன்பெற முயற்சி செய்துள்ளார்.
இதில் ஒரு வடமாநில நபர் சாமுவேல் ராஜின் புகைப்படம் மற்றும் விவரங்களை வாங்கியுள்ளார். பின்னர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. பணம் தரமுடியாது என சாமுவேல் ராஜ் கூறி வந்த நிலையில், அந்த நபர் அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து வாட்ஸ்ஆப்பில் அனுப்பி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
இதில் மனமுடைந்த சாமுவேல் ராஜ் கடந்த 29-ந்தேதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதாக கூறிவிட்டு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு காயல்பட்டினம் கொம்புத்துறை காட்டு பகுதியில் சாமுவேல் ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.