

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உப்பாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (30 வயது). இவர், கெலமங்கலம் சின்னட்டி பேருந்து நிறுத்தம் அருகில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். ராஜசேகருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் ருத்ரப்பா என்பவருக்கும் வழி பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜசேகர், தனது கடை உரிமையாளர் ராஜேஷ்குமார் மற்றும் நண்பர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி வாட்ஸ்-அப்பில் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், 'நள்ளிரவில் நானும், என்னுடைய தாய் மஞ்சுளாவும் (56 வயது) தற்கொலை செய்து கொள்கிறோம். அதற்கு காரணம் பக்கத்து வீட்டை சேர்ந்த ருத்ரப்பா, அவருடைய குடும்பத்தினர்தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னையும், எனது தாயையும் ஒரே குழியில் புதைக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ்-அப்பில் வந்த கடிதத்தை பார்த்து அதிர்ந்த ராஜேஷ்குமார் மற்றும் நண்பர்கள் நள்ளிரவில் கெலமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ராஜசேகரின் செல்போன் எங்கு உள்ளது என்பதை சிக்னல் மூலம் போலீசார் கண்டறிந்தனர். அதில் அவரது செல்போன் அருகில் உள்ள தண்டரை ஏரி பகுதியை காண்பித்தது. நேற்று அதிகாலையில் அங்கு சென்ற ஊர் பொதுமக்களும், போலீசாரும் ராஜசேகரின் கார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஏரியில் தாய், மகன் இருவரும் உடலை கட்டிக்கொண்டு தண்ணீருக்குள் பிணமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். அவர்கள் இருவரது உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம், ஹலகூர் பகுதியை சேர்ந்த போலீசார் நேற்று காலையில் ராஜசேகரை தேடி வந்தனர். அப்போது தாய், மகன் இருவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காரணம் ராஜசேகருக்கு பெங்களூருவில் பியூட்டி பார்லர் நடத்தும் நளினி என்ற காதலி இருந்ததும், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டு, கடந்த வாரம் காதலியை, ராஜசேகர் எரித்துக்கொன்றதும் தெரிய வந்தது. இந்த கொலை தொடர்பாக நேற்று முன்தினம் கர்நாடக போலீசார் செல்போனில் பேசி நேரில் விசாரணைக்கு வர இருப்பதாக ராஜசேகரிடம் கூறியுள்ளனர். கொலை வழக்கில் தான் போலீசில் சிக்கி கொண்டதை அறிந்து தனது தாயாருடன் சேர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.