கொருக்குப்பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து வாலிபர் பலி: செல்போன் பறித்த இரட்டையர்கள் கைது - ரெயில்வே போலீசார் அதிரடி

கொருக்குப்பேட்டையில் ஓடும் ரெயிலில் செல்போன் பறித்தபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியான வழக்கில், செல்போன் பறித்த இரட்டையர்களை ரெயில்வே போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.
கொருக்குப்பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து வாலிபர் பலி: செல்போன் பறித்த இரட்டையர்கள் கைது - ரெயில்வே போலீசார் அதிரடி
Published on

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோனி சேட் (வயது 24). இவர், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை சென்டிரல் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர், ரெயில் பெட்டியின் வாசல் கதவு அருகே அமர்ந்து செல்போன் பார்த்தபடி வந்தார்.

கொருக்குப்பேட்டை பகுதியில் ரெயில் மெதுவாக சென்றது. அப்போது தண்டவாளம் அருகே கீழே நின்றிருந்த வாலிபர்களில் ஒருவர், திடீரென ரெயில் படிக்கட்டில் அமர்ந்து இருந்த ரோனி சேட்டின் கையில் இருந்த செல்போனை தாவி பறித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், செல்போனை பிடிக்க முயன்றார். அப்போது ஓடும் ரெயிலில் இருந்து தவறிவிழுந்த ரோனி சேட், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் ரோனி சேட்டிடம் செல்போன் பறித்தது தொடர்பாக கொருக்குப்பேட்டை அம்பேத்கர் காலனி சி.பி. ரோட்டை சேர்ந்த அண்ணன், தம்பியான விஜயகுமார் என்ற ஏகா (வயது 19), விஜய் என்ற வெள்ளை (19) ஆகிய 2 பேரையும் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் இரட்டையர்கள் ஆவர். இவர்கள் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

விசாரணையில் இவர்கள் இருவரும் கஞ்சா போதையில் கொருக்குப்பேட்டை பகுதியில் மெதுவாகச் செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில் பயணிகளிடம் இதுபோல் கம்பால் அடித்தும், கையால் தட்டியும் செல்போன் பறித்ததும், பின்னர் அவற்றை குறைந்த விலைக்கு பர்மா பஜார் பகுதிகளில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com