16 வயது பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 1 ஆண்டு சிறை

திருநெல்வேலி மாவட்டத்தில் வாலிபர் ஒருவர், 16 வயது பள்ளி மாணவி ஒருவரை குற்றமுறு எண்ணத்தில் பின்தொடர்த்து பாலியல் ரீதியிலான தொந்தரவு செய்தார்.
16 வயது பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 1 ஆண்டு சிறை
Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டு அரவிந்த் (வயது 22) என்பவர், 16 வயது பள்ளி மாணவி ஒருவரை குற்றமுறு எண்ணத்தில் பின்தொடர்த்து, பாலியல் ரீதியிலான தொந்தரவு செய்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமி நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முந்தைய சப்-இன்ஸ்பெக்டர் அன்னஜோதி மற்றும் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு அரவிந்தை கைது செய்தனர்.

புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த வாலிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் அவர்களால் நேற்று முன்தினம் குற்றவாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா, வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அன்னஜோதி (தற்போது சேரன்மகாதேவி காவல் நிலையம்), வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த பெண் ஏட்டு வளர்மதி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 5 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனையும், 1 குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com