

சென்னை,
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கருணா என்ற கருணாகரன் (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில், சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கருணாகரன் பலமுறை சிறுமியை வன்புணர்வு செய்ததால், அந்த சிறுமி கர்ப்பமடைந்து, ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்த பிறகு, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி கருணாகரனிடம் கேட்டுள்ளார். ஆனால், இந்த குழந்தை என்னுடையது அல்ல, உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனக்கூறி கருணாகரன் சிறுமியை ஏமாற்றினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில், சிறுமிக்கு பிறந்த குழந்தையின் தந்தை கருணாகரன் தான் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி நசிமா பானு அதிரடி தீர்ப்பை வழங்கினார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கருணாகரனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும் அபராதத் தொகையை கட்டத் தவறினால், மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லட்சுமி ஆஜராகி வாதாடினார்.