பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: போலீஸ் அதிகாரி மீது மேலும் ஒரு வழக்கு

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் பெயரும் சேர்க்கப்பட்டது.
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: போலீஸ் அதிகாரி மீது மேலும் ஒரு வழக்கு
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தினார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவும் நேரில் சென்று உயர்மட்ட விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அப்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உள்ளிட்ட போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

தொடர்ந்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் உலகராணி அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து சந்தோஷ், அருண்குமார், வேதநாராயணன் ஆகியோர் அளித்த புகார்களின்பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் உள்ளிட்ட 5 போலீசார் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் ஒரு வழக்கு

தற்போது கல்லிடைக்குறிச்சி அயன்சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யா என்பவர் அளித்த புகாரின்பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், அப்போதைய கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, போலீஸ்காரர்கள் ஜோசப், ராமலிங்கம் ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

போலீஸ் அதிகாரி பல்வீர்சிங் மீது ஏற்கனவே 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4-வதாக மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்துவதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com