

சென்னை,
முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யு மான சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காலை, மாலை சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை சென்று கொண்டிருக்கும் தேஜஸ் விரைவு ரெயில் போதுமான பயணிகளின் ஆதரவின்மையால், வருகிற 4-ந்தேதி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரெயில்வே துறை அறிவித்திருப்பது மிகவும் தவறான நடவடிக்கை ஆகும். பொதுமக்கள் சார்பில் இதனை வன்மையாக கண்டிக்கிறேன். ரெயில் போக்குவரத்து லாபநோக்கத்தோடு மட்டும் நடத்தப்பட முடியாது. பொதுமக்களின் நலனுக்காக ரெயில் சேவை இயக்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பால் தற்காலிகமாக பொதுமக்கள் பயணம் செய்வது குறைந்து இருக்கலாம். ஆனால், இது நிரந்தரமான நிலை அல்ல. விமானங்களில் செல்ல முடியாதவர்களும், பஸ்களிலும் செல்ல விரும்பாதவர்களும் நடுத்தர கட்டணத்தோடு விரைவாக செல்ல சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை செல்ல பல்வேறு மாவட்ட மக்களுக்கும் தேஜஸ் ரெயில் வசதியாக இருந்தது. பொதுமக்களின் நலன் கருதியும், வசதி கருதியும் லாப-நஷ்ட கணக்கு பார்க்காமல் தேஜஸ் ரெயில் தொடர்ந்து இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.