புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை:பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை:பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனமர் பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சென்னகேசவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து சாமி மற்றும் கருடாழ்வாருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அன்ன அலங்கார சேவை

தர்மபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்ன அலங்கார சேவை நடைபெற்றது. இதையொட்டி நெய்வேத்திய பிரசாதங்களான லட்டு, ஜிலேபி, அப்பம், முறுக்கு, வடை, செர்ரி பழம், முந்திரி, புளியோதரை உள்ளிட்ட உளர் பழ வகைகளை கொண்டு வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை கருட சேவை உற்சவம், ஏகாந்த சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், சோகத்தூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வெங்கட்ரமணசாமி கோவில்

இதேபோல் மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் சாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழாவை தொழில் அதிபர் வேடியப்பன், செயற்பொறியாளர் ஜெயராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பேரூராட்சி தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி அருகே புலிக்கரையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை, உபகார பூஜை நடைபெற்றது. அப்போது கொடிமரத்தில் முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் பக்தர்கள் மகாதீபம் ஏற்றினர். பழைய தர்மபுரி அடுத்த வரதகுப்பத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அக்கமனஅள்ளி

இதேபோல் செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் சாமி கோவில், கம்பைநல்லூர் ஸ்ரீ லட்சுமி நாராயண சாமி கோவில், தென்கரைக்கோட்டை பட்டாபிராமர் சாமி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதேபோன்று மூக்கனூர் அக்கமனஅள்ளி ஸ்ரீ ஆதிமூல வெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு தங்ககவசம் சாற்றப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மோட்ச தீபம்

தர்மபுரி அருகே தோக்கம்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியில் உள்ள ஸ்ரீ சுயம்பு சென்றாய பெருமாள் கோவிலில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் மோட்சதீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் கோபாலகிருஷ்ண அய்யர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

--

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com