2-வது முறையாக கோவிலில் பூட்டை உடைத்து அம்மன் நகை, உண்டியல் பணம் கொள்ளை

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகமூடி கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
2-வது முறையாக கோவிலில் பூட்டை உடைத்து அம்மன் நகை, உண்டியல் பணம் கொள்ளை.
கொள்ளை
Published on: 

கரூர்,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஒரே கோவிலில் அடுத்தடுத்து 2-வது முறையாக, பூட்டை உடைத்து அம்மன் நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மன் கோவில்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாப்பேட்டை நெடுஞ்சாலையில், கருப்பத்தூர் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 6-ந்தேதி அன்று இரவு வழக்கமான பூஜைகள் முடிந்து, பூசாரி கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

நள்ளிரவில் முகமூடி திருடன்

இதையடுத்து அன்று நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த சிசிடிவி கேமராவைத் தன் முகம் அடையாளம் தெரியாதவாறு திசை திருப்பியுள்ளார். பின்னர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த அவர், அங்காளம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த அரை சவரன் தங்கச் செயின் மற்றும் உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமார் ரூ.3,000 ரொக்கப் பணம் ஆகியவற்றைத் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

அதிர்ச்சியில் பூசாரி

மறுநாள் 7-ந்தேதி அன்று காலை கோவிலைத் திறக்க பூசாரி வந்தபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு நகையும், பணமும் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக கோயில் நிர்வாகிகள் லாலாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஒரே மாதத்தில் 2-வது முறை

இதே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், கடந்த மாதம் 6-ந்தேதியும் நள்ளிரவில் பூட்டை உடைத்து அம்மனின் ஒன்றரை பவுன் நகை மற்றும் உண்டியலில் இருந்த ரூ.50,000 கொள்ளையடிக்கப்பட்டது. அந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் அதே கோயிலில் அடுத்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

போலீஸ் விசாரணை

ஒரே கோயிலில் அடுத்தடுத்து மாதாமாதம் நடக்கும் இந்த துணிகரக் கொள்ளைச் சம்பவங்களால் கருப்பத்தூர் பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடும் அச்சமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகமூடி கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com