

கடலூர்,
நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து அம்மன் முகத்தை துணியால் கட்டி 2¼ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் பணத்தை திருடி விட்டு உண்டியல்களை ஆற்றில் வீசிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே இறையூர் கிராமத்தில் வெள்ளாற்றங்கரையில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பூஜை செய்து விட்டு பூசாரி ராமலிங்கம் கோவிலை பூட்டிச் சென்றார். இதனை தொடர்ந்து நேற்று காலை 8.30 மணிக்கு பூசாரி ராமலிங்கம் கோவிலுக்கு வந்தார். அப்போது முன்பக்க கேட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.
கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, அம்மன் சிலையில் முகம் மட்டும் வெள்ளை துணியால் கட்டப்பட்டு இருந்தது. மேலும் அம்மன் கழுத்தில் கிடந்த 2¼ பவுன் தாலி சங்கிலி, மூக்குத்தி மற்றும் கோவிலில் இருந்த உண்டியல்கள், பித்தளை விளக்குகள் உள்ளிட்டவைகளை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் அவற்றை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி ராமலிங்கம், பெண்ணாடம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டனர்.
நேற்று முன்தினம் இரவு தொடர் மழை பெய்த சூழலிலும், மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தாலி சங்கிலி, 2 கிராம் மூக்குத்தி, 3 பித்தளை விளக்குகள், 7 பித்தளை தட்டுகள், முக்காளி, இரண்டரை அடி உயரமுள்ள 2 குத்துவிளக்குகள், ரூ.23 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 உண்டியல்களை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் நகையின் மதிப்பு மட்டும் ரூ.2.50 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், கோவிலில் வைக்கப்பட்டு இருந்த 4 கண்காணிப்பு கேமராக்கள், அதற்கான ஹார்டு டிஸ்க், மானிட்டர் உள்ளிட்ட பொருட்களையும் மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து கொள்ளை நடந்த கோவில் பகுதியில் போலீசார் பார்வையிட்டனர். அப்போது, அருகில் இருந்த வெள்ளாற்றில் 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. கோவிலில் இருந்து உண்டியல்களை தூக்கிச் சென்ற மர்மநபர்கள், அதை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடியதும், பின்னர் உண்டியல்களை வெள்ளாற்றில் வீசிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு சம்பவத்தை அம்மன் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக சாமி சிலையின் முகத்தை துணியால் கட்டி நகை, பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.