ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன தமிழகத்தில் கோவில்கள், தியேட்டர்கள், சலூன்கள் மூடப்பட்டன

தமிழகத்தில் ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. கோவில்கள், தியேட்டர்கள், சலூன் கடைகள் மூடப்பட்டன. டீக்கடைகள், ஓட்டல்களில் ‘பார்சல்’ சேவை மட்டுமே நடந்தன.
ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன தமிழகத்தில் கோவில்கள், தியேட்டர்கள், சலூன்கள் மூடப்பட்டன
Published on

சென்னை,

தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனாவின் 2-வது அலை பரவல் அனைவரையும் பயம் கொள்ள செய்திருக்கிறது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் தீவிரமாக கடைபிடிக்காததின் எதிரொலியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கொரோனா பாதிப்பு மிகுதியாகி கொண்டே வருகிறது.

இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. இதற்கிடையில் ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகளை கடந்த 24-ந் தேதி அரசு அறிவித்திருந்தது.

ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் அமல்

அதன்படி தமிழகத்தில் ஊரடங்கின் புதிய கட்டுப்பாடுகள் நேற்று அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள் (ஜிம்), கேளிக்கை விடுதிகள், மதுக்கடை பார்கள், பெரிய அரங்குகள், கூட்டரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. பெரிய கடைகள், மால்கள் மற்றும் வணிக வளாகங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. அதேபோல சலூன் கடைகள், அழகு நிலையங்களும் அடைக்கப்பட்டிருந்தன.

டீக்கடைகள் மற்றும் ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தன. இதனால் டீக்கடைகள் மற்றும் ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டுமே நடைபெறுகிறது என்ற வார்த்தைகள் இடம்பெற்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

வழிபாட்டுத்தலங்கள் மூடல்

முக்கியமாக கோவில்கள் நேற்று முதல் அடைக்கப்பட்டன. கோவில்கள் அடைக்கப்பட்டாலும் பூஜை உள்ளிட்ட தினசரி நடக்கும் நிகழ்வுகள் வழக்கம்போலவே நடந்தன. கோவில்கள் அடைக்கப்பட்டதால் வாசல்களில் நின்றே கற்பூரம் காட்டி பொதுமக்கள் இறைவனை வழிபட்டு சென்றனர். அதேபோல தேவாலயங்கள், மசூதிகள் உள்பட வழிபாட்டுத்தலங்கள் அனைத்துமே மூடப்பட்டன.

அதேபோல கோல்ப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து வகையான விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்களும் மூடப்பட்டன. மேலும் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் சேராதவாறும், நின்று கொண்டு பயணிக்காதவாறு டிரைவர்கள்-கண்டக்டர்கள் பார்த்துக்கொண்டனர்.

காய்கறி-மளிகை கடைகள்

அதேவேளை காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. காய்கறி விற்பனை செய்யும் பெரிய கடைகள், அங்காடிகள் குளிர்சாதன வசதிகள் இன்றி செயல்பட்டன. சமூக இடைவெளியில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து செல்ல கடைக்காரர்கள் அறிவுறுத்தினர்.

அதேவேளை வணிக வளாகங்களில் இயங்கும் மளிகை கடைகள், காய்கறி கடைகளும் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. அந்தவகையில் தனியாக செயல்படும் மளிகை உள்பட பலசரக்கு கடைகள் மட்டுமே இயங்க அனுமதி தரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரைகளில் போலீசார் கண்காணிப்பு

சென்னையில் மேற்கண்ட உத்தரவுகள் தீவிரமாக அமலுக்கு வந்தன. ஏற்கனவே கடற்கரைகள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது தியேட்டர்களும் அடைக்கப்பட்டது பொதுமக்களுக்கு சற்று வருத்தத்தை தந்திருக்கிறது. ஆனாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசின் உத்தரவை ஏற்று, பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்.

மேலும் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் நடமாடாதவாறு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இரவு நேர ஊரடங்கு அமல்

அதேவேளை நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு வழக்கம்போல அமலானது. சென்னையில் இரவு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகளும், ஓட்டல்களும் இரவு 9 மணியுடன் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதனால் காலை முதல் பரபரப்பாக இயங்கிய நகரம் இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு எனும் பெயரில் ஆள் அரவமின்றி அமைதியானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com