கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடல்

கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் திரண்டதால் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுப்பிரியர்கள் கடையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

டாஸ்மாக் கடைகள்

கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் கடைவீதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 2 டாஸ்மாக் கடைகளும், அதனுடன் பார்களும் செயல்பட்டு வந்தது. இதையடுத்து, பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் நலன் கருதி 2 டாஸ்மாக் கடைகளையும் மூடக்கோரி கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி நூற்றுக்கணக்கான பெண்கள் 2 டாஸ்மாக் கடைகளையும், பார்களையும் அடித்து நொறுக்கினர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடைகள் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவித்தனர். அதன் பிறகு அப்பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் எதிர்ப்பால் மூடப்பட்டன.

பெண்கள் திரண்டதால் பரபரப்பு

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் அனைத்து கட்சி அவசரக்கூட்டம் நடத்தப்பட்டு கடந்த 28-ந் தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகள் மூடவில்லை என்றால் 29-ந் தேதி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கடை மூடும் வரை போராட்டம் நடத்துவதாக அப்பகுதி மக்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழிகளை போலீசார் தடுப்புகளை வைத்து அடைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் டாஸ்மாக் கடை முன்பு போலீஸ் வாகனங்களை நிறுத்தி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமையில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக செல்ல முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தியதால் பெண்கள் தோட்டங்களுக்குள் நுழைந்து பல பக்கங்களில் இருந்தும் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மூடப்பட்டது

இதையடுத்து, ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக்ரஜினி, தாசில்தார் விசுவநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிரந்தரமாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பெண்களின் போராட்டத்தையடுத்து இன்று (நேற்று) டாஸ்மாக் கடை மூடப்படும். அதன் பிறகு சில நாட்களில் ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடத்தி அதன் முடிவு படி நடவடிக்கை எடுக்கப்படும் அதுவரை டாஸ்மாக் கடை மூடியிருக்கும் என்று தாசில்தார் அறிவித்தார். இந்த அறிவிப்பையடுத்து பெண்கள் கண்ணீர்மல்க கைகூப்பி கும்பிட்டனர். டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் பெண்களும், இளைஞர்களும் களைந்து சென்றனர்.

கடையை திறக்கக்கோரி...

பெண்களின் போராட்டத்தினால் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்ததையடுத்து டாஸ்மாக் கடை அருகே திரண்டிருந்த ஏராளமான மதுப்பிரியர்கள் எங்களுக்கு டாஸ்மாக் கடை வேண்டும். கடையை திறக்க வேண்டும். கொத்தமங்கலத்தில் வர்த்தகம் பாதிக்கப்படுவதால் டாஸ்மாக் கடை அவசியம் வேண்டும் என்று முழக்கங்களுடன் கடையை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சமாதானம் பேச்சுவார்த்தை நடத்தி திருப்பி அனுப்பினர். ஒரே நேரத்தில் இரு கோரிக்கைகளுடன் ஏராளமானோர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com