கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிக பணி வழங்கலாம்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரசு பணி வழங்குவதில் என்ன தவறு? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தற்காலிக பணி வழங்கலாம்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மதுரை,

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 32 பேர் குடும்பத்துக்கு கரூரில் இன்று நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் விஜய் அரசு பணி ஆணை வழங்குகிறார். இதற்கிடையில், கரூர் சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க தடைகோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்குவதாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதா?. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பொருளாதார உதவி தேவைதானே? அரசு பணி வழங்குவதில் என்ன தவறு? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “கருணை அடிப்படையில் பணி வழங்கினால் சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பாக அமையும். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்களில் இறந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு தரவில்லை; அரசுப் பணி வழங்கப்படவில்லை என வாதிட்டார்.

அனைத்து வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி, கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு தடையில்லை; இன்று வழங்கப்படும் பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும். ஆனால், அந்த பணியின் நிரந்தரதன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது எனக் கூறிய நீதிபதிகள் அரசுப்பணி வழங்குவதற்கு எதிரான வழக்கில் டி.என்.பி.எஸ்.சியை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு வழக்கை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com