வீடு, வீடாக சென்று மருந்து தெளிக்கும் தற்காலிக பணியாளர்கள்

திண்டுக்கல்லில் டெங்கு, மலேரியா பரவலை தடுக்க வீடு, வீடாக சென்று மருந்து தெளிக்கும் பணியில் தற்காலிக பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வீடு, வீடாக சென்று மருந்து தெளிக்கும் தற்காலிக பணியாளர்கள்
Published on

தடுப்பு நடவடிக்கைகள்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் டெங்கு, மலேரியா போன்ற நோய்த்தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனுக்கு கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து கொசுப்புழுக்களை அழிக்கும் அபேட் மருந்து மற்றும் புகை மருந்து ஆகியவற்றை வார்டு வாரியாக தெளிக்கும்படி சுகாதாரத்துறையினருக்கு ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து வார்டு பகுதிகளில் கொசுப்புழு அழிப்பு மருந்துகளை தெளிப்பதற்காக தற்காலிக பணியாளர்கள் 60 பேர் நியமிக்கப்பட்டனர்.

வீடு, வீடாக சென்று...

நேற்று இவர்கள், மாநகராட்சி வார்டு பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று திறந்த நிலையில் தண்ணீர் தொட்டி, பிளாஸ்டிக் டிரம்கள் உள்ளிட்டவைகள் இருக்கிறதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அத்துடன் வீடுகளின் முன்பு, சாலையோரங்களில் தேங்காய் மட்டைகள், சிரட்டைகள், டயர்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி இருக்கிறதா? என்றும் பார்வையிட்டனர்.

பின்னர் வீடு, வீடாக சென்று திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து தெளித்தனர். மேலும் டெங்கு கொசுப்புழுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். நேற்று தொடங்கிய இந்த பணி வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கொசுப்புழுக்கள் அழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்கள் வீடுகளில் திறந்த நிலையில் தண்ணீர் தொட்டிகளை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com