

சென்னை,
சென்னையில் ரூ.284 கோடி மதிப்பு கொண்ட நடைபாதை திட்டப் பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. நடைபாதை திட்டங்களில் பல முறைகேடுகள் உள்ளதாக எழுந்த புகாரில் 35 டெண்டர்களையும் மாநகராட்சி ரத்து செய்துள்ளது.
இந்த திட்டத்திற்கான திட்ட அறிக்கையை ஆய்வு செய்தபோது, அதில் பல்வேறு அடுக்கடுக்கான குளறுபடிகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, திட்டத்தின் ஒட்டுமொத்த செலவை செயற்கையாக உயர்த்தி காட்டியிருப்பதுதெரியவந்துள்ளது. சில ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமான முறையில் இந்த டெண்டர்கள் வடிவமைக்கப்பட்டிருந்ததும் மாநகராட்சியின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்ட அறிக்கையில் தேவையில்லாத பல கூடுதல் பணிகளைச் சேர்த்து, அதன் மூலம் அரசுக்கு மிகப்பெரிய அளவில் நிதி இழப்பை ஏற்படுத்த முயன்றதும் அம்பலமாகியுள்ளது. ஒரு மீட்டருக்கு நடைபாதை அமைக்க வழக்கமான விலையை விட 4 மடங்கு அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நடைபாதை திட்டப் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கப்படும் எனவும் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.