டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி. வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு

சென்னை, கோவை, மாநகராட்சிகளில் ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு என எஸ்.பி. வேலுமணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி. வேலுமணி பெயர் மீண்டும் சேர்ப்பு
Published on

சென்னை,

அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி பதவி வகித்தார். சென்னை, கோவை மாநகராட்சிகளில் சாலைப் பணிகள் மேற்கொள்ள உறவினர்கள், நெருக்கமானவர்களுக்கு, 'டெண்டர்' வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, தி.மு.க., தரப்பில், அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து, வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி, ஐகோர்ட்டில் வேலுமணி மனு தாக்கல் செய்தார். வேலுமணிக்கு எதிரான வழக்கை மட்டும், ஐகோர்ட் ரத்து செய்தது. ஆதாரங்கள் சேகரித்து இருந்தால் மீண்டும் வழக்கு தொடரலாம் என தெரிவித்து இருந்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அறப்போர் இயக்கம் தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த கூடுதல் மனுவில், முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளது. அவருக்கு எதிராக ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதால் வழக்குத் தொடர சபாநாயகர் அனுமதி வழங்கி உள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு செப்டம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com