

தென்காசி,
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மாரிக்கண்ணன் (வயது 47). அ.தி.மு.க. தொண்டரான இவர் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர் ஆவார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி வேலம்மாள். இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பெருவாரியான தொகுதிகளில் த.வெ.க. வெற்றி பெற்றது. அ.தி.மு.க. குறைவான இடங்களிலே வெற்றி பெற்றது. ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்தார். தேர்தல் முடிவுகளை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்த மாரிக்கண்ணன், அ.தி.மு.க. எதிர்பார்த்த வெற்றியை பெறாததாலும், ஆலங்குளம் தொகுதியிலும் தோல்வியை தழுவியதாலும் மனமுடைந்த நிலையில் இருந்தார். இதுகுறித்து தனது நண்பர்கள், உறவினர்களிடம் கூறி சோகத்தில் மூழ்கினார்.
இந்த நிலையில் மாலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரிக்கண்ணன் திடீரென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த பிள்ளைகள் தங்களுடைய தந்தை தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினர்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த மாரிக்கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததால், பாவூர்சத்திரம் அருகே தொண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.