

தென்காசி,
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னி மலை முருகன் கோவில் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கலைச்செல்வி என்பவர் அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வந்தார். அங்கு படிக்க வந்த குழந்தைகளில், ஒரு சுட்டி குழந்தை அதிகமாக சத்தமிட்டதால்,அவர் அந்த 2½வயது பெண் குழந்தை மீது சாக்குப்பையில் போட்டு துன்புறுத்தியுள்ளார்.
இந்த கொடூரமான செயல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் பலத்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த அங்கன்வாடி பெண் ஊழியர் மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், தென்காசி மாவட்ட நிர்வாகம் குழந்தையை துன்புறுத்திய அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்; அவர்களுக்கு நற்போதனைகளை வழங்கி, ஊழியர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்திட வேண்டும். இது போன்ற குழந்தைகள் துன்புறுத்தல் சம்பவங்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் மீது மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2½ வயது குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில், பாவூர்சத்திரம் போலீசார் அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வி மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.