தென்காசி: வேன்-கார் தீப்பிடித்து எரிந்து வங்கி உதவி மேலாளர் பலி

தென்காசி மாவட்டத்தில் சிவகாசிக்கு சென்ற காரும், குற்றாலத்துக்கு சென்ற வேனும் நேருக்குநேர் மோதியதில் 2 வாகனங்களும் அப்பளம்போல் நொறுங்கியதோடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கின.
வேன்-கார் தீப்பிடித்து எரிந்து வங்கி உதவி மேலாளர் பலி.
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் இலத்தூர் பகுதியில் வேனும் காரும் நேருக்குநேர் மோதி, தீப்பிடித்து எரிந்த விபத்தில் விருதுநகரைச் சேர்ந்த வங்கி உதவி மேலாளர் பலியானார்.

வங்கி உதவி மேலாளர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் குமாரசாமி ராஜா நகரை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 34), சிவகாசியில் உள்ள கனரா வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவில் இவர் தனது காரில் குற்றாலம் சென்று விட்டு சிவகாசி நோக்கி சென்று கொண்டி ருந்தார். எதிர்திசையில் சிவகாசியில் இருந்து குற்றாலத்தை நோக்கி 13 பேர் கொண்ட குழுவினர் ஒரு வேனில் சுற்றுலாவுக்காக வந்து கொண்டிருந்தனர்.

விபத்தில் வேன்-கார் தீப்பிடித்து எரிந்தது

நேற்று அதிகாலை இலத்தூர் விலக்கு அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது எதிர்பாராதவிதமாக விஜய் ஆனந்த் ஓட்டி வந்த காரும், சுற்றுலா வேனும் நேருக்குநேர் மோதின. அதில் 2 வாகனங்களும் அப்பளம்போல் நொறுங்கியதோடு திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கின. வேனில் இருந்த 13 பேரும் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கி உயிர் தப்பினர்.

வங்கி உதவி மேலாளர் பலி

அவர்களில் சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த காசிஅலி மகள் நர்கீஸ்பானு(18), அதே பகுதியை சேர்ந்த ரியாஸ்தீன் மனைவி பல்கீஸ்பானு(21), சைபுல்லா மனைவி ஹசீனாபானு(42) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த விஜய் ஆனந்த் காருக்கு உள்ளேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தென்காசி தீயணைப்பு படையினர், மாவட்ட எஸ்.பி. அசோக்குமார், இலத்தூர் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாற்றுப்பாதையில்

தீயணைப்பு படை வீரர்கள் 2 வாகனங்களிலும் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அவை தீயில் கருகி நாசமாகின. விபத்து காரணமாக திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

விபத்து குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரும், வேனும் மோதி தீப்பிடித்த விபத்தில் வங்கி அதிகாரி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com