புளியரை சோதனை சாவடியில் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ‘திடீர்' ஆய்வு

வாகன போக்குவரத்து கண்காணிப்பு பணிகள் மற்றும் அங்கிருந்த தனியார் எடைமேடைகளில் வாகனங்கள் எடை போடப்படுவது குறித்த விவரங்களையும் ஆய்வு செய்தார்.
 புளியரை சோதனை சாவடி
Published on

செங்கோட்டை,

தென்காசி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடி வழியாக ஏராளமான லாரிகள் மூலம் இரவு பகலாக கொண்டு செல்லப்படுகின்றன.இதனால் சாலைகள் பழுதடைவதோடு, விபத்துகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், கனிம வள லாரிகள் கன்னியாகுமரி வழியாக கேரளா செல்வதை கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தடை செய்துவிட்ட நிலையில், அந்த வழியாக சென்ற வாகனங்களும் தற்போது தென்காசி வழியாகவே செல்கின்றன.

இதனால் கூடுதலாக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து, செங்கோட்டை முதல் புளியரை வரையிலான பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, கனிம வளக் கடத்தலை தடுக்கக் கோரி பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று கூட புளியரை இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அதில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், புளியரை சோதனைச் சாவடிக்கு நேற்று நள்ளிரவில் பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலைத் துறை அமைச்சருமான ராஜீவ் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அவர் புளியரை எஸ்-வளைவு பகுதி, போலீஸ் சோதனைச் சாவடி மற்றும் போக்குவரத்து சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினார்.

வாகன போக்குவரத்து கண்காணிப்பு பணிகள் மற்றும் அங்கிருந்த தனியார் எடைமேடைகளில் வாகனங்கள் எடை போடப்படுவது குறித்த விவரங்களையும் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது தென்காசி மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் நியாஸ், இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் ஜமீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிலையில், ஏற்கனவே கனிம வளத்துறை அமைச்சர் பிரபு இதேபோல் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார். எனினும், இதுவரை கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவது குறைக்கப்படவில்லை என்பதே சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com