தென்காசி: வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

தனியாக வசித்த மூதாட்டியை கொன்று நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி: வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கொன்று நகை கொள்ளை
Published on: 

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியாக வசித்த மூதாட்டி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ராமச்சந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி ஜானகி பாப்பா (வயது 82). இவர்களுடைய வளர்ப்பு மகன் சிவா. இவருக்கு திருமணமாகி விட்டது. பழனிச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே ஜானகி பாப்பா தனது மகன், மருமகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. எனவே சிவா மனைவியின் சொந்த ஊருக்கு சென்று வசித்து வந்தார். ஜானகி பாப்பா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நகை கொள்ளை

நேற்று மாலையில் சிவா தனது தாயாரை பார்ப்பதற்காக ராமச்சந்திராபுரத்தில் உள்ள வீட்டுக்கு சென்றார். அங்கு ஜானகி பாப்பா தலையில் கல்லால் தாக்கி பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

ஜானகி பாப்பா அணிந்திருந்த 64 பவுன் தங்க சங்கிலி மாயமானது தெரிய வந்தது. எனவே வீட்டில் ஜானகி பாப்பா தனியாக இருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொன்று நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து கடையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த ஜானகி பாப்பாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளி களை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். கடையம் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டியை கொன்று நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com