

தென்காசி,
தென்காசி மாவட்ட மத்திய நூலகத்தில் அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து வாங்கப்பட்ட 2,200 போலி நூல்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பிற நூலகங்களில் போலி நூல்கள் உள்ளனவா என்று சோதனை நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தென்காசி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் தென்காசி மாவட்ட மத்திய நூலகத்திலும் நூலக ஊழியர்கள் சோதனை செய்தனர். அப்போது அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து வாங்கப்பட்ட சுமார் 2,200 போலி நூல்களை கண்டறிந்து அகற்றியுள்ளனர். 2,200 புத்தகங்களும் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டவை என்பதைக் கண்டறிந்து அகற்றியுள்ளதாக நூலக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நூல்கள் திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.27 லட்சத்திற்கு அகல்விளக்கு பதிப்பகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மற்ற பதிப்பகங்களை விட அகல்விளக்கு பதிப்பகத்திற்கு பணம் மிக வேகமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. நிவேதா அன்பழகன், நிவேதா சுப்பையா, மனிஷா சரவணன், மனிஷா ஆகாஷ், மனிஷா அர்ஜுன் ஆகிய பெயர்களில் இந்த போலி நூல்கள் இடம்பெற்றுள்ளன.