தென்காசி: 2 குழந்தைகளை எரித்துக்கொன்று தாய் தீக்குளித்து தற்கொலை

தென்காசி மாவட்டம், சிவகிரி பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் ஒருவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால், கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
உயிரிழந்த மாரியம்மாள், ரபினேஷ்வரன், கபிஷேன்வரன்.
Published on: 

தென்காசி,

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கோவில் கொடை விழாவில் கணவர் அவதூறாக பேசியதால் 2 குழந்தைகளை எரித்துக்கொன்று தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவில் கொடை விழா

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள வடக்குசத்திரம் பகுதியை சேர்ந்த காளிப்பாண்டி (வயது 33), பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவருக்கும், விருதுநகர் மாவட்டம் தேவதானம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள்(25) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு கபினேஷ்வரன்(5), ரபினேஷ்வரன்(4) ஆகிய 2 மகன்கள் உண்டு. இதில் கபினேஷ்வரன் 1-ம் வகுப்பும், ரபினேஷ்வரன் அங்கன்வாடிக்கும் சென்று வந்தனர்.

காளிப்பாண்டிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கொடை விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் மாரியம்மாள் தனது 2 மகன்களுடன் விழாவுக்கு சென்றார். அங்கு அவர் பெண்களுடன் கும்மியடித்துக் கொண்டு இருந்தார்.

தீக்குளிப்பு

அப்போது அங்கு மதுபோதையில் வந்த காளிப்பாண்டி தனது மனைவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாரியம்மாள் தனது 2 மகன்களையும் அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டில் இருந்த மண்எண்ணெயை 2 மகன்கள் மீதும், தன் மீதும் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

2 குழந்தைகளுடன் தாய் உயிரிழப்பு

இதில் உடல் கருகி பலத்த காயம் அடைந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். 2 குழந்தைகளும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது. அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் கபினேஷ்வரன், ரபினேஷ்வரன் ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com