

தென்காசி,
தென்காசி மாவட்டம், கடையம் அருகே தனிப்பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள லட்சுமியூர் பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவருக்கு சொந்தமான 22 சென்ட் நிலத்தில் இருக்கும் வீட்டிற்கு கூட்டுப்பட்டா வெங்கடாம்பட்டி பகுதி-2 கிராமத்தில் உள்ளது. அந்த வீட்டின் மீது கடன் பெறுவதற்காக ஒரு வங்கிக்கு தாமோதரன் சென்றார். ஆனால் தனிப்பட்டா வேண்டும் என்று வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் தாமோதரன் அந்த வீட்டிற்கு தனிப்பட்டா வேண்டி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துவிட்டு, வெங்கடாம்பட்டி பகுதி-2 கிராம நிர்வாக அலுவலரான சேர்மப்பாண்டியன் என்பவரிடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் ஒரு வாரத்தில் சேர்மப்பாண்டியன், நிலஅளவையருடன் சென்று இடத்தை அளந்தார். தாமோதரனிடம் தனிப்பட்டா வழங்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என்று தாமோதரன் கூறினார். இறுதியில் ரூ.4 ஆயிரம் தர வேண்டும் என சேர்மப்பாண்டியன் கூறினார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அவர் செல்போனில் தாமோதரனை தொடர்பு கொண்டு தனிப்பட்டா வந்துவிட்டது. பணத்தை கொடுத்துவிட்டு தனிப்பட்டாவை வாங்கிச்செல்லுமாறு கூறினார். ஆனால் தாமோதரன் பணத்தை கொடுக்கவில்லை.
நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு தாமோதரனை அழைத்து சேர்மப்பாண்டியன் கண்டித்ததாக கூறப்படுகிறது. எனினும் பணம் கொடுக்க விரும்பாத தாமோதரன் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ரசாயன பவுடர் தடவிய ரூ.4 ஆயிரத்தை தாமோதரனிடம் போலீசார் நேற்று கொடுத்து அனுப்பினர். கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற அவர், அங்கிருந்த சேர்மப்பாண்டியனிடம் பணத்தை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு பால்சுதர் தலைமையிலான போலீசார், கிராம நிர்வாக அலுவலர் சேர்மப்பாண்டியனை கையும், களவுமாக பிடித்தனர். அவர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடையம் அருகே தனிப்பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.