

சென்னை,
தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. ஏற்கனவே. காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 5 தொகுதிகள், ம.தி.மு.க.வுக்கு 4, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதிய கட்சிகள் கூட்டணிக்குள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்து கேட்குமாறு தனது கூட்டணி கட்சிகளை தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. திமுகவுடன் இரண்டு முறை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தொகுதி பங்கீட்டில் எந்த விதமான முடிவும் எட்டப்படவில்லை.
திமுக கூட்டணியில் தொடர்ந்து விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு வருகிறது. ஆனால் திமுக கூட்டணியில் விசிக-வுக்கு 7 தொகுதிகளை கொடுக்க முன்வந்துள்ளது. தொகுதி பங்கீடு இழுபறிகளுக்கிடையே விசிக நாளை அவசர உயர் நிலை குழு கூட்டத்தை கூட்டுகிறது. திருமாவளவன் தலைமையில் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், சிந்தனை செல்வன் மற்றும் துணை பொதுச்செயலாளர்கள் , நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.