

மதுரை,
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பிரசார் பாரதியின் கீழ் செயல்படும் டி.வி.க்களில் கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதியில் இருந்து நாள் தோறும் 15 நிமிடம் சமஸ்கிருத மொழியில் செய்தி வாசிப்பது நடைமுறையில் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்காக ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சமஸ்கிருத மொழியை விட பழமையான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு போதுமான நிதியை அரசு ஒதுக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் 15 நிமிட சமஸ்கிருத செய்தியை கட்டாயமாக நடைமுறைப்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல. எனவே பொதிகை டி.வி.யில் 15 நிமிடம் சமஸ்கிருத செய்தி வாசிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தனது கோரிக்கை குறித்து மனு அளித்து உரிய நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.